திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கொரோனா முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டவர் தனிமை காலம் முடியும் முன்பே சொந்த ஊர் திரும்பினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழனியை சேர்ந்த 5 நபர்கள் கொரோனா முன்னெச்சரிக்கையாக கரூர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், அவர்களில் ஒருவரான அண்ணாநகரை சேர்ந்த நபருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்ததை அடுத்து அவரை இன்று சொந்த ஊர் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாநகர் பகுதிமக்கள் இரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனிமை காலம் முடியும் முன்பே அந்த நபரை சொந்த ஊர் அனுப்புவதால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாகவும், தனிமை காலம் முழுவதும் மருத்துவமனையில் வைத்து கண்காணிக்க வேண்டும் என்றும் கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், தனிமைப்படுத்தப்பட்டவர்களால் எந்த பாதிப்பும் வராது என்றால் ஊர் முழுவதையும் தனிமைப்படுத்தி வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன என்று சரமாரியாக கேள்வியெழுப்பினர்.
இதையடுத்து, அந்த நபரை பழனி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி கண்காணிப்பதாகவும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை வரும் 25-ம் தேதிக்கு பிறகு திறப்பதாகவும் அதிகாரிகள் உறுதியளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.