கொரோனாவால் விலைசரிவு புதுவையில் கூவிகூவி விற்பனை சாத்துக்குடி மூட்டை ரூ. 400

புதுச்சேரிக்கு வருடந்தோறும் கோடைகாலங்களில் சாத்துக்குடி பழ வரத்து அதிகளவில் இருக்கும். குளிர்பானக் கடைகளில் சாத்துக்குடி ஜூஸ் வியாபாரமும் ஜரூராக நடக்கும். கோடை வெயிலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் அதிகளவில் சாத்துக்குடி ஜூஸ் அருந்துவார்கள்.  ஆனால் இந்தாண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வெளியே உணவு பொருட்களை உண்பதை பெரும்பாலும் தவிர்த்து வருகின்றனர். குறிப்பாக ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றை அவர்கள் சாப்பிட ஆர்வம் காட்டவில்லை. இதனால் கோடை காலத்தில் அதிகளவில் வியாபாரத்தை எதிர்பார்த்த குளிர்பான கடைகள் ஏமாற்றத்தை சந்தித்துள்ளன.  இருப்பினும் புதுச்சேரிக்கு வெளி மாநிலங்களில் இருந்து வழக்கம்போல் சாத்துக்குடி பழ மூட்டைகள் அதிகளவில் இறக்குமதியாகின்றன.

ஆனால் இவற்றின் விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. 25 முதல் 30 கிலோ வரையிலான சாத்துக்குடி மூட்டை ரூ.400 முதல் ரூ.420 வரை மட்டுமே விலைபோகிறது. இதனால் அவற்றை மூட்டையாக வாங்கும் சில்லறை வியாபாரிகள், அவற்றை வண்டிகளில் ஏற்றி வந்து 6 கிலோ ரூ.100, 5 கிலோ ரூ.100 என தரம் வகையாக பிரித்து வீதிகளில் கூவிகூவி விற்று வருகின்றனர்.  இதுகுறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது, கொரோனா ஊரடங்கு காரணமாக சாத்துக்குடி வியாபாரம் இந்தாண்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்த விலை போகாததால் குறைந்த விலைக்கு பழங்களை விற்று வருகிேறாம் என்றனர்.