இன்று முதல் இ-சேவை, ஆதார் மையம் இயங்கலாம்

சென்னை தவிர தமிழகம் முழுவதும் இ-சேவை, ஆதார் மையங்கள் கலெக்டரின் ஒப்புதலை பெற்று இன்று முதல் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவன மேலாண்மை இயக்குநர் சங்கர் அனை த்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசு இ-சேவை மையங்கள் மற்றும் ஆதார் சேர்க்கை மையங்கள் மே 17ம் தேதி வரை தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் 18ம் தேதி (இன்று) முதல்  அரசு உத்தரவுப்படி இ-சேவை மையங்கள் மற்றும் ஆதார் சேர்க்கை மையங்களை சென்னை நீங்கலாக மாவட்ட கலெக்டரின் ஒப்புதல் பெற்று செயலாக்கத்தில் கொண்டுவர கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எனினும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள அரசு இ-சேவை மையங்களையும், ஆதார் சேவை மையங்களையும் திறக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. பணிபுரியும் இடத்தில் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். கிருமி நாசினி உபயோகித்து கையை 30 நிமிடங்களுக்கு ஒருமுறை கழுவ வேண்டும். பொருட்களை கிருமி நாசினியை உபயோகித்து சுத்தமாக பராமரிக்க வேண்டும். பணியாளர்கள் பயோமெட்ரிக் கருவியின் மூலம் பதிவினை மேற்கொள்ளும் போது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.  

கையுறை அணிந்து ஆவணங்களை கையாள வேண்டும். 3 அடி அல்லது ஒரு மீட்டர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் கூட்டம் கூடுவதை அனுமதிக்க கூடாது. கிருமி நாசினியை தேவைப்படும் இடங்களில் வைத்து பொதுமக்களை உபயோகப்படுத்த அறிவுறுத்த வேண்டும். அனைத்து மையங்களும் கிருமி நாசினி கொண்டு முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.