பழநி : பழநி பகுதியில் மக்காச்சோளம் அறுவடை செய்துவரும் நிலையில் போதிய விலை இல்லை என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
பழநி பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மானாவாரியாக மக்காச்சோளம் சாகுபடி செய்கின்றனர். கடந்த ஆண்டு படைப்புழுவால் மக்காச்சோள பயிர்கள் பாதிப்படைந்தன. இந்தாண்டு சத்திரப்பட்டி, கணக்கன்ப்பட்டி, கோம்பைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விளைந்த மக்காச்சோளத்தை தற்போது இயந்திரம் மூலம் அறுவடைசெய்து வருகின்றனர்.
அமரபூண்டி விவசாயி சிவனேசன் கூறியதாவது: ஏழு ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்திருந்தேன். விளைச்சல் இருந்தாலும், சென்ற ஆண்டை விட விலை குறைவாக கேட்கின்றனர்.
சென்ற ஆண்டு குவிண்டாலுக்கு ரூ.2,300 கிடைத்தது. இந்தாண்டு வியாபாரிகள் ரூ.1,700 க்குத்தான் கேட்கின்றனர்.தற்போது அறுவடை செய்து தட்டைகளை 30 முதல் 35 கிலோ கட்டுகளாக கட்டிவைக்கிறோம். தட்டைகளை இயந்திரம் மூலம் சுத்தம் செய்து ஒரு கட்டாக கட்ட ரூ.55 செலவாகிறது, என்றார்.